தேனி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது


தேனி அருகே  தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது
x

தேனி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

தகராறில் கொலை

தேனி அருகே பூதிப்புரம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரகுமார் (வயது 55). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (42) என்பவருக்கும், ஊர்க்காலன் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையே அப்பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பாக நேற்று தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த மகேஸ்வரகுமார், ராதாகிருஷ்ணனை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் அவரிடம் தகராறு செய்து மரக்கட்டையால் அவரை தாக்கினர். அதை தடுக்க வந்த மகேஸ்வரகுமாரின் மனைவி வாசுகி, மகள் ஜனனி, தம்பி நாகராஜ், தங்கை ராமதிலகம் ஆகிய 4 பேரையும் அவர்கள் தாக்கினர். இதில் அவர்கள் 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்களில் மகேஸ்வரகுமார் உயிரிழந்தார்.

உடலை வாங்க மறுப்பு

இந்த சம்பவம் குறித்து அவருடைய மகள் ஜனனி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராதாகிருஷ்ணன், அவருடைய தந்தை பெரியகருப்பன் (67), அதே பகுதியை சேர்ந்த செல்வம், தினேஷ், நல்லுச்சாமி, சதீஷ் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யக்கோரி நேற்று உறவினர்கள் பூதிப்புரத்தில் சாலை மறியல் செய்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இரவில் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். விடிய, விடிய நடத்திய தேடுதல் வேட்டையில் நல்லுச்சாமி, பெரியகருப்பன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 பேர் கைது

மேலும் பூதிப்புரத்தில் இருந்து மகேஸ்வரகுமாரின் உறவினர்கள் சாலை மறியல் செய்வதற்காக பழனிசெட்டிபட்டி நோக்கி நடந்து வந்தனர். ஆதிப்பட்டி கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே இந்த வழக்கில் செல்வம், தினேஷ், சதீஷ் ஆகியோரையும் இன்று போலீசார் கைது செய்தனர். அதன் மூலம் வழக்கில் மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விவரத்தை மறியல் செய்ய திரண்டு வந்த மக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் முயற்சியை கைவிட்டு உடலை வாங்க ஒப்புக்கொண்டு அவர்கள் ஊருக்கு திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story