தேனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 தொழிலாளர்கள் பலி:திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
தேனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிள்களில் பயணம்
கோம்பையை சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 24). மதுரை வீரகனூரை சேர்ந்தவர் மணிமாறன் (26). இவர்கள் 2 பேரும், ஜெயமுருகனின் உறவினரான போடி அணைக்கரைப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நடத்தி வருகிற நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள அந்த நிறுவனத்திலேயே, அவர்கள் 2 பேரும் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் அணைக்கரைப்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு ஜெயமுருகன், மணிமாறன் ஆகிய 2 பேரும் சென்றனர். இரவில் அவர்கள் அங்கிருந்து தனித்தனி மோட்டார் சைக்கிள்களில், அணைக்கரைப்பட்டியில் இருந்து பழனிசெட்டிபட்டி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
அடுத்தடுத்து மோதல்
போடி-தேனி சாலையில் கோடாங்கிபட்டியை அடுத்த தனியார் மில் அருகே ேமாட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கோடாங்கிபட்டியை சேர்ந்த ராஜதுரை (52) என்பவர், மற்றொரு மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.
எதிர்பாராத விதமாக ராஜதுரை ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும், மணிமாறன் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது மணிமாறனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயமுருகன், ஏற்கனவே விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்களில் மோதினார். இதில் அவரும் தூக்கி வீசப்பட்டார்.
தொழிலாளர்கள் பலி
அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் அவற்றில் பயணம் செய்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மணிமாறன், ஜெயமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
படுகாயங்களுடன் ராஜதுரை உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம், அவர்களுடைய உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.