தேனி அருகேபாம்புகளுடன் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்திய வாலிபர் கைது
தேனி அருகே பாம்புகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்திய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாம்புகளுடன் நடனம்
தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது வாலிபர்கள் சிலர் பாம்புகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது. பாம்புகளுடன் வாலிபர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனி வனச்சரகர் செந்தில்குமாருக்கு, மாவட்ட வன அலுவலர் சமர்த்தா உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த வீடியோக்களை வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
விசாரணையை தொடர்ந்து வீரபாண்டியை சேர்ந்த முகில்வண்ணன் (வயது 23) என்பவரை நேற்று முன்தினம் தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 நல்ல பாம்புகள், 2 சாரைபாம்புகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பாம்புகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. கைதான முகில்வண்ணனை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வனத்துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளை தேனி வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.
இந்த சம்பவத்தில் கோட்டூரை சேர்ந்த வாலிபர் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பேரில் தலைமறைவாக உள்ள அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.