திண்டிவனம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்


திண்டிவனம் அருகே  அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள் திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்காக தினசரி காலை மற்றும் மாலை நேரத்தில் டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை 7.15 மணிக்கு வருவதுடன், மாணவர்கள் நேரத்துடனே பள்ளிக்கு புறப்பட வேண்டிய நிலை உள்ளது. மேலும் மாலை நேரத்தில் 5.45 மணிக்கு தான் திண்டிவனத்தில் இருந்து ஏப்பாக்கம் கிராமத்திற்கு பஸ் புறப்படுகிறது. மாலை 4 மணியளவில் பள்ளிக்கூடம் முடிவடைவதால் சுமார் 2 மணிநேரம் மாணவர்கள் அங்கேயே நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வந்தனர். காலை 7.15 மணிக்கு இயக்கப்படும் பஸ்சை காலை 8 மணிக்கும், மாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் பஸ்சை மாலை 5 மணிக்கு இயக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஏப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் நேற்று காலை ஏப்பாக்கம் கிராமத்திற்கு வந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட கலெக்டா் மற்றும் போக்குவரத்து கழக மேலாளருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story