திருப்பரங்குன்றம் அருகே ரூ.2.69 கோடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம்
திருப்பரங்குன்றம் அருகே ரூ.2 கோடியே 69 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே ரூ.2 கோடியே 69 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
போக்குவரத்து அலுவலகம்
மதுரையில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் என 3 போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கான தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகமானது மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பை-பாஸ் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரக்கூடிய தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர்களுக்கான சோதனைக்களம் முறையாகவும், பெரியதாகவும் இல்லாத குறை இருந்தது. இதனால் ஓட்டுநர்கள் மட்டுமல்லாது அலுவலர்களும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை புறநகர்பகுதி சார்ந்த பல்வேறு கிராம மக்கள் ஓட்டுனர் உரிமமுன்பதிவு, லைசென்சு, புதிய வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் என்பது உள்பட வாகனங்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் தெரிந்துகொள்வதற்காக தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகருக்குள் வந்து செல்வதில் போக்குவரத்து நெருக்கடியால் தவித்து வருகின்றனர்.
ரூ.2.69 கோடியில் புதிய அலுவலகம்
அதேசமயம் ஓட்டுனர் உரிமம், புதியவாகன பதிவு மிகவும் அவசியம் என்பதால் சிக்கலை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. போக்குவரத்து நெரிசலுக்கு உரியதீர்வு கிடைக்காதா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மேலக்குயில்குடியில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடியே 69 லட்சத்தில் முதல் தளத்துடன் ஓட்டுனர்களுக்கான சோதனைக்களத்துடன் கூடிய புதிய தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவது என்றுமுடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இறுதியில் பணி தொடங்கி முழுவீச்சில் நடந்தது. தற்போது தயார் நிலையில் உள்ளது. எனவே, விரைவில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி என மதுரை புறநகரில் உள்ள பல்வேறு கிராம பகுதிகள் சார்ந்த வாகன ஓட்டிகள் லைசென்சு பெறுதல், புதுப்பித்தல், புதியவாகனங்கள் பதிவு செய்தலுக்காக நேரடியாக மேலக்குயில்குடி அலுவலகத்திற்கு வந்து செல்லலாம்.
மேலக்குயில்குடியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படும்போது மதுரை பழங்காநத்தம் மற்றும் காளவாசல் பைபாஸ் ரோட்டில் வாகன நெரிசல், போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஓரளவுக்கு சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சமயம் வடபழஞ்சி, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.