தூத்துக்குடி அருகே, நடுக்கடலில்இலங்கைக்கு படகில் பீடி இலை கடத்தல்


தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே, நடுக்கடலில் இலங்கைக்கு படகில் பீடி இலை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பீடி இலைகளை நடுக்கடலில் வைத்து இலங்கை மீனவர்களின் படகுகளில் ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தன. அதே போன்று பீடி இலை, கடல் அட்டை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் கடத்தப்பட்டன.

இதனை தடுக்க கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களையும் தாண்டி கடத்தல் கும்பல் தொடர்ந்து கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் சற்று முன்னேறி கடத்தல் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவ விட்டு உள்ளனர்.

பீடி இலை

இந்தநிலையில், தூத்துக்குடி அருகே கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வரிசையாக மூட்டைகளை தூக்கி சென்று படகுகளில் ஏற்றுவது போன்றும், பின்னர் நடுக்கடலில் அந்த சாக்கு மூட்டைகளை இலங்கையை சேர்ந்த 2 படகுகளுக்கு மாற்றுவது போன்ற வீடியோவும் வைரலாகி வருகிறது.

இதில் கடத்தல்காரர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோ மூலம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story