வீரபாண்டி அருகேநிர்வாணமாக சுற்றித்திரிந்த டிராக்டர் டிரைவர் கைது:கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல்
வீரபாண்டி அருகே நிர்வாணமாக சுற்றித்திரிந்த டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ேநற்று முன்தினம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித்திரிந்தார். அப்போது அந்த நபர் அங்கிருந்த வீட்டின் கதவை காலால் எட்டி உதைத்தார். இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து 23 வயது பெண் ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் அந்த நபர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் பொதுமக்கள் ஒன்று கூடி அந்த நபருக்கு ஆடையை கட்டி பிடித்து வைத்தனர். மேலும் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் என்பதும், மது போதையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் 23 வயது பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், அந்த நபர் எனது பெரியப்பாவை தாக்க வந்தார். அதை தடுக்க முயன்றபோது எனது பெரியம்மாவையும் தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் அவர்களை டிராக்டரை ஏற்றி கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.