வெள்ளித்திருப்பூர் அருகேகுடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வெள்ளித்திருப்பூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர்
வெள்ளித்திருப்பூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே பெரிய குருநாதசாமி கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ளவர்களுக்கு கடந்த 1 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இங்குள்ளவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்தியூர்- குருவரெட்டியூர் மெயின் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.