வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் திருட்டு


வெள்ளோடு அருகே  வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் திருட்டு
x

வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் திருட்டு போனது.

ஈரோடு

சென்னிமலை

வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பூட்டு உடைப்பு

ஈரோடு அடுத்த வெள்ளோடு அருகே உள்ள முகாசி அனுமன்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 73). விவசாயி. இவருடைய மனைவி சரோஜா (67). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் ஆகி ஈரோட்டில் வசிக்கிறார்கள். பொன்னுசாமியும், சரோஜாவும் தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் பொன்னுசாமியும், சரோஜாவும் உறவினர் ஒருவர் வீட்டுக்கு காரில் சென்றனர். பின்னர் மாலை 4 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமியும், சரோஜாவும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

நகை - பணம் திருட்டு

வீட்டின் அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. உள்ளே இருந்த துணிகள் வெளியே சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம், 4 ஜோடி தங்க கம்மல், ½ பவுன் தங்க காசு மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைந்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடனே பொன்னுசாமி வெள்ளோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை-கொள்ளை

கடந்த 30-4-2022 அன்று சென்னிமலை அருகே உள்ள உப்பிலிபாளையம் குட்டக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி துரைசாமி என்பவரையும், அவருடைய மனைவி ஜெயமணியையும் மர்ம நபர்கள் தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே துரைசாமி பலியானார்.

அதேபோல் கடந்த 8-ந் தேதி இரவு சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதியான முத்துசாமியையும், சாமியாத்தாளையும் மர்ம நபர்கள் கொன்று பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

அச்சம்

கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. அதனால் ஏற்கனவே நடந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தான், பொன்னுசாமி வீட்டிலும் கைவரிசை காட்டினார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

சென்னிமலை பகுதியில் தொடர்ந்து வயதான தம்பதிகள் வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொலை, கொள்ளையில் ஈடுபடுவது அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story