வேப்பூர் அருகே மரத்தில் கார் மோதல்; வாலிபர் பலி
வேப்பூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிாிழந்தார்.
வேப்பூர்,
பண்ருட்டி தாலுகா மருங்கூர் அருகே உள்ள கீழக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜெய்சங்கர் (வயது 34). இவர் தனது நண்பர்களான தோரணப்பட்டு கிராமத்தை சேர்ந்த உக்கிரவேல் மகன் ஞான பிரகாஷ் (30), சிங்காரவேல் மகன் சிவஞானம் (25) ஆகியோருடன் ஒரு காரில் மின் மோட்டார் வாங்குவதற்காக கோயம்புத்தூருக்கு சென்றார். பின்னர் மோட்டார் வாங்கிக்கொண்டு அனைவரும் அதே காரில் பண்ருட்டிக்கு புறப்பட்டனர். காரை ஜெய்சங்கர் ஓட்டினார்.
இவர்களது கார் அதிகாலை 5 மணியளவில் விருத்தாசலம்-சேலம் சாலையில் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, ஜெய்சங்கர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
வாலிபர் பலி
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஞானபிரகாஷ், சிவஞானம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.