விழுப்புரம் அருகே காய்கறி வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
விழுப்புரம் அருகே காய்கறி வியாபாரியை தாக்கி பணம் பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
வேலூர் மாவட்டம் பேரனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அனிஷ்அகமது மகன் சாஜித்அகமது (வயது 31). இவர் விழுப்புரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாஜித்அகமது, காய்கறி வியாபாரத்தை முடித்துக்கொண்டு வேலூர் செல்ல விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்து நின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், சாஜித்அகமதுவிடம் சென்று வேலூர் பஸ், தற்சமயத்தில் இங்கு வராது என்றும் புறவழிச்சாலையில்தான் வரும் என்று கூறி அவரை அந்த வாலிபர்கள், தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றனர்.
அய்யூர்அகரம் மேம்பாலம் அருகே சென்றதும் சாஜித்அகமதுவை அந்த வாலிபர்கள், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறக்கி திடீரென அவரை இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு அவர் பையில் வைத்திருந்த ரூ.36 ஆயிரத்தை பறித்துச்சென்று விட்டனர். இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.