விளாத்திகுளம் அருகே வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
விளாத்திகுளம் அருகே வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 63 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 63 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
வீட்டை உடைத்து கொள்ளை
விளாத்திகுளம் அருகே உள்ள சல்லிசெட்டிபட்டி கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி செல்லப்பாண்டியன் மனைவி ராதா (வயது 39) என்பவரது வீட்டின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து, வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ராதா அளித்த புகாரின் பேரில், சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடயங்களை கைப்பற்றினர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் முருகன் மகன் மணிகண்டன் (26), குணசேகரன் மகன் வசந்தகுமார் (23) மற்றும் பாண்டிச்சேரி குமரகுரு பள்ளம் பகுதியைச் சேர்ந்த அம்புரோஸ் மகன் ராஜா (எ) பாலாஜி (36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 13 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பிரபாகரன் (23) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்தநிலையில் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் சங்கரலிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் பரசுராமன், சின்னத்துரை ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி சென்னை வேளச்சேரியில் பதுங்கியிருந்த பிரபாகரனை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 63 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சசம்பவம் தொடர்பாக மேலும் சிலரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.