விருத்தாசலம் அருகே உதவி பெண் பேராசிரியர் குடும்பத்தினருடன் தர்ணா கொள்ளை போன நகைகள், பணத்தை மீட்டு தர கோரிக்கை


விருத்தாசலம் அருகே  உதவி பெண் பேராசிரியர் குடும்பத்தினருடன் தர்ணா  கொள்ளை போன நகைகள், பணத்தை மீட்டு தர கோரிக்கை
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே கொள்ளை போன நகைகள், பணத்தை மீட்டு தர கோரி உதவி பெண் பேராசிரியர் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை 6-வது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 60). இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகிய 3 மகள்களும், விக்னேஷ் (27) என்ற மகனும் உள்ளனர். சின்னதுரை கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். சுதா, ராஜலட்சுமி ஆகியோருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

ஜெயலட்சுமி காரைக்காலில் உள்ள ஒரு விவசாய கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். விக்னேஷ் தனலட்சுமியுடன் புதுக் கூரைப்பேட்டையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயலட்சுமியின் திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த 110 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை கொள்ளையர்கள் பிடிக்கப்படாததாலும், நகைகள் மீட்கப்படாததாலும் ஜெயலட்சுமிக்கு திருமணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 5-ந் தேதி ஜெயலட்சுமி குடும்பத்தினர் புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது தாய் தனலட்சுமி, சகோதரர் விக்னேஷ் மற்றும் பொதுமக்களுடன் புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளை போன நகைகளை உடனடியாக மீட்டு தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கைகளில் வைத்திருந்தனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story