கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தேவையான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது :வேளாண் அதிகாரி தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தேவையான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது :வேளாண் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேவையான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி தொிவித்தார்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நெல், பருத்தி, கம்பு, மரவள்ளி, மணிலா, மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நடப்பு பருவ பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் சரக்கு ரெயில் மூலம் சென்னை மற்றும் தூத்துக்குடியிலிருந்து வேளாண்மைத்துறை மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உரகிடங்கு, தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி நேற்று மாலை சென்னை பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆயிரத்து 458 மெட்ரிக் டன் யூரியா உரமூட்டைகள் சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு வந்திறங்கியது.இதை கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையில் துணை இயக்குனர் விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், மண்டல மேலாளர் குமரேசன் ஆகியோர் ஆய்வு செய்து, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு லாரிகளில் அனுப்பி வைத்தனர்.

தேவையான அளவு உரம் இருப்பு

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி கூறுகையில், சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு தற்போது ஆயிரத்து 458.9 மெட்ரிக் டன் யூரியா உரமூட்டைகள் வந்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 1075.5 மெட்ரிக் டன், சேலம் மாவட்டத்திற்கு 383.4 மெட்ரிக் டன் என பிரித்து லாரிகளில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 2 ஆயிரத்து 637 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2 ஆயிரத்து719 மெட்ரிக் டன், பொட்டாஷ் ஆயிரத்து 727 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் ஆயிரத்து 42 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 11,145 மெட்ரிக் டன் உரங்கள் என்று தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயனடையலாம்

விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களுக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

1 More update

Next Story