நீலியம்மன், செல்லியம்மன் கோவில் தேரோட்டம்


நீலியம்மன், செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
x

பெரம்பலூர் அரணாரையில் அமைந்துள்ள நீலியம்மன், செல்லியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்

வைகாசி திருவிழா

பெரம்பலூர் அரணாரையில் துறையூர் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நீலியம்மன், செல்லியம்மன், எல்லமுத்துசாமி, பெரியசாமி கோவில் வைகாசி திருவிழா கடந்த 2015, 2018 ஆண்டுகளில் நடந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு பிறகு திருவிழா 17-ந் தேதி இரவு காப்புகட்டுதலுடன் தொடங்கி விமரிசையாக நடந்துவருகிறது. அடுத்தடுத்த தினங்களில் சந்திமறித்தல் நிகழ்ச்சியும், கேடயம், அன்னம், சிம்மம், சாரட் குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடந்தது.

23-ந் தேதி மின்விளக்கு அலங்காரத்தில் சாமிபுறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் பெரியசாமி கோவில் பூஜையும், மாலை அம்மன்கோவில் பூஜையும், இரவு குதிரைவாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், விமரிசையாக நடந்தது. நேற்று காலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நீலியம்மன், செல்லியம்மன், எல்லமுத்துசாமி, பெரியசாமி சிலைகள் கோவிலில் இருந்து திருத்தேருக்கு பிரகார வலமாக கொண்டுவரப்பட்டு தேரில் வைக்கப்பட்டது.

வடம் பிடித்தல் நிகழ்ச்சி

இதனைத்தொடர்ந்து வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் தலைவரும், பல்கலைக்கழக வேந்தருமான சீனிவாசரெட்டியார், செயலாளர் நீலராஜ், இயக்குனர் மணி, கோவில் கிராமத்தலைவர் மணி உடையார், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற கவுன்சிலர்துரை.காமராஜ், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ்மோகன்ராஜ், மருதையான் கோவில் வரதராஜன் கல்வி குழுமத்தின் தலைவர் எம்.என்.ராஜா, முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் பேபிகாமராஜ் உள்பட கோவில் தர்மகர்தாக்கள், பூசாரிகள் திருவிழா பொறுப்பாளர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் பூசாரிகள், கிராமத்தின் தேரோடும் வீதிகளின் வழியே ஊர்வலமாக அழைத்து தேர்நிலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

தேரோட்டம்

இதனைத்தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. அரணாரை கிராம காரியதரிசிகள், கோவில்பூசாரிகள், தர்மகர்தாக்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள், பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை, நொச்சியம், புதுநடுவலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தனர். திருச்சி, துறையூர், பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சீர் கொடுத்து வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகளின் வழியே இழுத்து வரப்பட்டு மாலையில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி நேற்று இரவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராடுதல் விழாவுடன் திருவிழா நிறைவு அடைகிறது.


Next Story