3 மையங்களில் நீட் தேர்வு இன்று நடக்கிறது

நாகையில் 3 மையங்களில் நீட் தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வை நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 1,750 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
நாகையில் 3 மையங்களில் நீட் தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வை நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 1,750 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் நீட் தேர்வை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வானது நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்த நுழைவு சீட்டில் மாணவ, மாணவிகள் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகையில் 3 மையங்கள்
நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு நாகையில் நடக்கிறது. நாகை சின்மையா பள்ளி, அமிர்தா பள்ளி, இ.ஜி.எஸ். பிள்ளை பள்ளி ஆகிய 3 மையங்களில் நீட் தேர்வு இன்று நடக்கிறது. இதில் நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 1,750 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 3½ மணி நேரம் நடக்கும் இந்த தேர்வில், வழக்கம் போல கடுமையான கெடுபிடிகள், பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தேர்வு எழுத உள்ள மாணவ- மாணவிகள் முன்னதாக ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாகையில் 3 தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.






