அரியலூரில் 3 மையங்களில் 'நீட்' தேர்வு இன்று நடக்கிறது
அரியலூரில் ‘நீட்' தேர்வு 3 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 2,078 பேர் எழுதுகிறார்கள்.
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்கிறது. மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த கல்வி ஆண்டு முதல் அரியலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுத தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டில் அரியலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு நடத்துவதற்கு 3 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு நடைபெறும் மையங்கள், தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
கருப்பூரில் உள்ள கீழப்பழுவூர் விநாயகா பப்ளிக் பள்ளியில் 1,056 மாணவ-மாணவிகளும், அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் பள்ளியில் 672 மாணவ-மாணவிகளும், தாமரைக்குளம் வித்யா மந்திர் பள்ளியில் 350 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 2,078 பேர் 'நீட்' தேர்வு எழுதவுள்ளனர். இதனால் அந்த தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு மாணவ-மாணவிகள் தேர்வு எழுத தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த கல்வி ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் 1,994 பேர் 'நீட்' தேர்வு எழுத 5 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கல்வி ஆண்டில் 2,078 பேர் 'நீட்' தேர்வு எழுதவுள்ள நிலையில் 2 மையங்கள் குறைக்கப்பட்டுள்ளது.