3-வது மாடியில் இருந்து குதித்து 'நீட்' பயிற்சி மாணவி தற்கொலை முயற்சி


3-வது மாடியில் இருந்து குதித்து நீட் பயிற்சி மாணவி தற்கொலை முயற்சி
x

‘நீட்’ தேர்வு பயிற்சி மைய கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவருடைய மகள் ஆனந்தி (18). இவர் படியூரில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மணிகண்டன், ஆனந்தி படிக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு வந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 2-வது மாடியில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு முடிந்து, கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆனந்தி திடீரென்று 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

ரத்தம் கொட்டியது

கண் இமைக்கும் நேரத்தில் ஆனந்தி, 3-வது மாடியில் இருந்து ரோட்டில் விழுந்ததில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்து மணிகண்டன் கதறி துடித்தபடி கீழே ஓடிச்சென்று மகளை தனது மடியில் போட்டு அழுது புரண்டார். உடனடியாக ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்துச் சென்றார். பின்தலை மற்றும் இடுப்பு பகுதியில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே தகவலறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் மாணவியின் இந்த விபரீத செயலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story