பொதுப்பணித்துறை இட ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை
பொதுப்பணித்துறை இட ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை உதவி-கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
இடம் ஆக்கிரமிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ரவுண்டானா அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வளாகம் உள்ளது. இங்கு விருந்தினர் மாளிகை, வீராணம் இல்லம், பொதுப்பணி துறை அலுவலகம் போன்றவை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தின் முன்புறம் சுமார் 4 சென்ட் பொதுப்பணித்துறை இடத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டினர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சார்பில் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.
குடியேறும் போராட்டம்
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் பணிகள் தொடங் கப்பட்டு நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். பல்வேறு கட்சியினரும் தங்கள் கட்சி கொடிகளை அந்த வளாகத்தில் நட்டனர்.
திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு அதிகாரிகளின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவித்தனர்.
சமாதான கூட்டம்
இதையடுத்து, செங்கல்பட்டு உதவி-கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் முத்து, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் லோகநாதன், பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் ஆனந்தன். தே.மு.தி.க. ரமேஷ் ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்களின் சார்பில் மனு அளித்தனர்.
பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று முதற்கட்டமாக கட்டிடம் கட்டும் பணியை நிறுத்தி வைக்கவும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலங்களை மறுவரையறை செய்திடவும் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட இடத்திலேயே ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்.