டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது தீ விபத்தில் காயமடைந்த பக்கத்து கடைக்காரர் சாவு


டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது தீ விபத்தில் காயமடைந்த பக்கத்து கடைக்காரர் சாவு
x

நாகர்கோவில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த பக்கத்து கடைக்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த பக்கத்து கடைக்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

டீக்கடையில் தீ விபத்து

நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்த சபிக் என்பவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா (47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17-ந் தேதி அதிகாலையில் அவர் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது திடீரென்று சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை முழுவதும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் கடை ஊழியர்கள், டீக்குடிக்க வந்தவர்கள் மற்றும் பக்கத்து கடைக்காரர்கள், டீக்கடை அருகில் சாலையோரம் நின்றவர்கள் என ஏராளமானோர் மீது தீப்பற்றியதில் காயமடைந்தனர்.

8 பேர் படுகாயம்

அந்த வகையில் மூசா, வடசேரி பெரியராசிங்கன் தெருவை சேர்ந்த சேகர், வெட்டூர்ணி மடத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் காட்டுப்புதூர் சுசீலா (50), தக்கலை சசிதரன் (63), முத்தலக்குறிச்சி சுதா (43), நெய்யூர் பக்ருதீன் (35), அருகுவிளை சுப்பையா (66) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பக்கத்து கடைக்காரர் சாவு

இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தக்கலையை சேர்ந்த சசிதரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இவர் தீ விபத்து நடந்த டீக்கடை அருகே டயர் கடை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக தீ விபத்தில் காயமடைந்த 8 பேருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியை கலெக்டர் அரவிந்த் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story