நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல்: தி.மு.க. கவுன்சிலர்கள் 10 போ் வெற்றி
நெல்லையில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் வெற்றி பெற்றனர்.
நெல்லையில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் வெற்றி பெற்றனர்.
திட்ட குழு தேர்தல்
நெல்லை மாவட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஊரக பகுதிகளுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நகர்ப்புற பகுதிகளுக்கான அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் 10 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 10 உறுப்பினர்களை தேர்வு செய்ய 23 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர். அவர்கள், ஒவ்வொருவருக்கும் 10 வாக்குகள் செலுத்தும்படி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த தேர்தலின் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
தேர்தலை கலெக்டர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து நபர்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் மாலை 3 மணி வரை நடந்தது.
இந்த தேர்தல் வாக்குப்பதிவை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், கிழக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடாமணி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
10 பேர் தேர்வு
நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் வசந்தா, ரசூல் மைதீன், சகாய ஜூலியட் மேரி, அம்பை நகராட்சி கவுன்சிலர் ஜோதிகலா, களக்காடு நகராட்சி கவுன்சிலர் பூதத்தான், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் சுஜாதா, பணகுடி பேரூராட்சி கவுன்சிலர் கோபால கண்ணன், கோபாலசமுத்திரம் பேரூராட்சி கவுன்சிலர் சுதா, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் சுபினா, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் மீனா ஆகிய 10 பேரும் வெற்றி பெற்றனர்.