நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம்
நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடந்தது
நெல்லையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. திட்டக்குழு தலைவரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி பேசினார். கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், "மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சேகரித்து தொகுத்து தகவல் களம் அமைத்தல், வரைபடம் ஒன்றை தயாரித்து, மாவட்டத்தின் வளர்ச்சிக்கான ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல், ஊரக மற்றும் நகர் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்பு துறை தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுக்க வேண்டும். மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கருத்தில் கொண்டு மாவட்ட திட்டக்குழு விவாதித்து மாவட்டம் முழுமைக்குமான வரைவு வளர்ச்சி திட்டத்தை தயாரிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் உள்பட அனைத்து வளர்ச்சி திட்டங்கள், பணிகள் செயலாக்கத்தை நாம் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். உள்ளாட்சிகளின் வளர்ச்சி திட்டங்களை மாவட்ட அளவில் தொகுக்க வேண்டும். மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபடக்கூடிய ஒரு உயிர் துடிப்புள்ள நிறுவனமாக செயல்பட வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் சுப்பிரமணியன், திட்டக்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், சத்தியவாணிமுத்து, அருண்தவசு, சாலமன் டேவிட், கிருஷ்ணவேணி, தனித்தங்கம், ஜான்ஸ் ரூபா, லிங்க சாந்தி, கோபாலகிருஷ்ணன், சகாய ஜூலியட் மேரி, சுதா, கபீனா, சுஜாதா, பூதத்தான், மீனா, ரசூல்மைதீன், வசந்தா, ஜோதிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.