நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் நேரத்தை மாற்ற வேண்டும் - தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தல்


நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் நேரத்தை மாற்ற வேண்டும் - தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தல்
x

நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் தாம்பரம் சென்றடையும் நேரத்தை மாற்றி அமைக்கும்படி தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை


நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் தாம்பரம் சென்றடையும் நேரத்தை மாற்றி அமைக்கும்படி தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விடுமுறை கால சிறப்பு ரெயில்

தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை கோட்டத்தில் தென் மாவட்ட பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லையில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06004), நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06003) தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் வருகிற ஜூன் மாதம் 26-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

இதில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் ரெயில், இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மதுரைக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு வந்தடைகிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

பொதுப்பெட்டிகள்

மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 8.30 மணிக்கு தென்காசி சென்றடைகிறது. காலை 10.40 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயிலில் ஒரு 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளி பெட்டியுடன் கூடிய பார்சல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். ரெயில், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

நேர மாற்றம்

இதற்கிடையே நெல்லையில் இருந்து புறப்படும் ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக சென்றடையும்படி, நேர அட்டவணையை மாற்றி அமைக்க தென் மாவட்ட பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் 19-ந் தேதி திருவனந்தபுரம் கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

இந்த ரெயில் கொச்சுவேலியில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு தாம்பரம் சென்றடையும்படி நேர அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விடுமுறை கால சிறப்புக்கட்டண ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு காலை 9.20 மணிக்கு சென்றடையும் படி நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அட்டவணையை மாற்றி காலை 8 மணிக்குள் தாம்பரம் சென்றடையும் படி ரெயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள்

இதுகுறித்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது சென்னை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மட்டுமே, மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் நேரம் மட்டும் இங்கு முடிவு செய்யப்படும். ரெயில் நிறுத்துவதற்கான பிளாட்பார வசதி, பிற ரெயில்களின் இயக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு பயணிகளும் பாதிக்காத வகையில் இந்த நேர ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே இதில் முடிவு செய்ய வேண்டியது சென்னை கோட்ட நிர்வாகம் தான் என்றனர்.


Next Story