நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் திடீர் மோதல்-போலீஸ் குவிப்பு


நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் திடீர் மோதல்-போலீஸ் குவிப்பு
x

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் பணி நியமனம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் இருதரப்பினர் திடீரென மோதிக் கொண்டனர்.

திருநெல்வேலி

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் பணி நியமனம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் இருதரப்பினர் திடீரென மோதிக் கொண்டனர்.

பணி நியமன பிரச்சினை

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் தலைமையிடம் பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

கடந்த 30-ந்தேதி பிஷப் பர்னபாஸ் தலைமையில் நடைபெற்ற திருமண்டல கல்வி நிலைக்குழு கூட்டத்தில் பணி நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீர்மானத்துக்கு மற்றொரு அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

திடீர் மோதல்

இந்த நிலையில் பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் திருமண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்தை பூட்டுவதாக தகவல் பரவியதால், போலீசார் அங்கு சென்று அமைதியை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஒருவர் நேற்று அலுவலகத்துக்கு சென்று பணியை மேற்கொள்ள முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்த ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக பேசினர். அப்போது திடீரென்று மோதல் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

இதுபற்றி தகவல் தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் வாசிவம் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து இருதரப்பை சேர்ந்தவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் அதிகாரிகள், 'புதிய பணி நியமனம் தொடர்பாக முன்னாள்-இந்நாள் நிர்வாகிகள் கோர்ட்டுக்கு சென்று உரிய தீர்வை தேடிக்கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் இருதரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

மேலும் அங்கு மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திருமண்டல அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார்

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story