நெல்லை மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

நெல்லை மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக சென்றடைவதை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'நெல்லை மாவட்டத்தில் வீட்டு வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை நலவாரியங்களில் உறுப்பினராக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தகுதியான கட்டுமான தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதற்கு தொழிற்சங்கங்கள் உதவ வேண்டும்' என்றார்.
தச்சநல்லூரை சேர்ந்த பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளி முனியாண்டி என்பவர் பணியின்போது விபத்தில் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
கூட்டத்தில் தொழிலாளர் இணை ஆணையர் பா.சுமதி, தொழிலாளர் உதவி ஆணையாளர் நா.முருகப்பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






