நெல்லை சந்திப்பு பகுதியில் 19-ந் தேதி முதல் டவுன் பஸ்கள் இயக்கம்
நெல்லை சந்திப்பு பகுதியில் 19-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக 5 தற்காலிக பஸ் நிறுத்தங்களில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை சந்திப்பு பகுதியில் 19-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக 5 தற்காலிக பஸ் நிறுத்தங்களில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
19-ந் தேதி முதல்...
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் கட்டி முடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொது மக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி தற்காலிகமாக பஸ் நிலையத்தை சுற்றிலும் டவுன் பஸ்களை மட்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி 19-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் ராஜா பில்டிங் முன்பு 4 தற்காலிக பஸ் நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே மதுரை ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்கூடையும் பயன்படுத்தப்பட உள்ளது. அங்கு 1, 2, 3, 4, 5 என பஸ் நிறுத்தங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, அதன் கீழ் எந்த மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் என்ற அறிவிப்பும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வழித்தடம் அறிவிப்பு
இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 நிறுத்தங்களில் நின்று செல்லும் பஸ்களில் விவரம் வருமாறு:-
1-ம் எண் நிறுத்தத்தில் நெல்லை எம்.ஜி.ஆர். புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் 1-ம் நம்பர் மற்றும் 2-ம் நம்பர் டீலக்ஸ் பஸ்கள் நின்று செல்லும்.
2-ம் எண் பஸ் நிறுத்தத்தில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் வழியாக செல்லும் பஸ்கள் நின்று செல்லும். 3-ம் எண் நிறுத்தத்தில் பாளையங்கோட்டை மார்க்கெட் வழியாக செல்லும் பஸ்கள் நின்று செல்லும், 4-ம் எண் நிறுத்தத்தில் டவுன், பேட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்லும்.
இதையொட்டி டவுன் பொருட்காட்சி தற்காலிக பஸ் நிலையம் வருகிற 22-ந் தேதியுடன் மூடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
தச்சநல்லூர் பஸ்கள்
இதுதவிர சந்திப்பு பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள மதுரை ரோட்டில் ஏற்கனவே இருக்கும் பயணிகள் நிழற்குடை அருகில் தச்சநல்லூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்லும். அதற்காக 5-எண் என்ற அறிவிப்பு பலகை நிறுவப்பட்டு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்கள்.