நெல்லை அணி 5-வது வெற்றி
கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி நெல்லை அணி 5-வது வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் அபராஜித் அரை சதம் விளாசினார்.
கோவை
கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி நெல்லை அணி 5-வது வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் அபராஜித் அரை சதம் விளாசினார்.
14-வது லீக் போட்டி
6-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி, நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. நெல்லையை தொடர்ந்து திண்டுக்கல்லில் போட்டி நடைபெற்றது. அடுத்த கட்டமாக கோவையில் டி.என்.பி.எல். போட்டி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது. முதன்முறையாக கோவையில் டி.என்.பி.எல். போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி கோவையில் இன்று நடந்த 14-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஜோடி ஏமாற்றம்
இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சித்தார்த், அரவிந்த் களமிறங்கினர். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடக்க வீரர் அரவிந்த் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் 8 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றினார்.
அதன்பின்னர் களம் இறங்கிய சுப்பிரமணியன் ஆனந்த் 15 ரன்களிலும், பிரான்சிஸ் ரோக்கின்ஸ் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மான் பாப்னா, துஷார் ரஹேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. எனினும் துஷார் ரஹேஜா 18 ரன்களில் அபராஜித் ஓவரில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து மான் பாப்னா 37 ரன்களில் நடையை கட்டினார். அதன்பின்னர் வந்த கருப்பசாமி(3 ரன்கள்), அஸ்வின் கிறிஸ்ட்(2 ரன்கள்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. முகமது(10 ரன்கள்), தாமரை கண்ணன்(5 ரன்கள்) ஆகியோர் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். நெல்லை அணி தரப்பில் ஈஸ்வரன் 3 விக்கெட்டுகள், ஹரீஸ் 2 விக்கெட்டுகள், சஞ்சய் யாதவ், ரூபன்ராஜ், அபாரஜித் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
5-வது வெற்றி
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி அடுத்து களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரீஸ், சூர்ய பிரகாஷ் ஜோடி களம் புகுந்தது. ஆனால் ஹரீஸ் 7 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சூர்யபிரகாஷ், அபராஜித்துடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். அந்த ஜோடி 60 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் சூர்யபிரகாஷ் 28 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் கிறிஸ்ட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய அபராஜித் அரைசதம் கடந்தார். அவர் 63 ரன்கள் (46 பந்துகள், 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அஜிட்டேஸ், கேப்டன் இந்திரஜித்துடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் 15.3 ஓவரில் நெல்லை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 5-வது லீக் போட்டியிலும் வாகை சூடி நெல்லை அணி தனது வெற்றி பயணத்தை தொடர்கிறது. ஆட்டநாயகனாக அபராஜித் தேர்வானார்.