17 வயது சிறுமி பலாத்கார வழக்கு:நெல்லிக்குப்பம் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நெல்லிக்குப்பம் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மினி லாரி டிரைவர்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் என்கிற ராஜ் (வயது 33). மினி லாரி டிரைவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பங்கூரில் தங்கி இருந்து வடமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் விஜயராஜின் மனைவி பிரசவத்திற்காக அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விஜயராஜிக்கு ஒரு விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டது.
பலாத்காரம்
எனவே, அவர் அந்த 17 வயது சிறுமிக்கு போன் செய்து தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தெரிவித்தார். பின்னர் அவரை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு உதவிக்கு சென்ற சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டிற்கு வந்தபின் பெற்றோரிடம் கூறினார்.
இது தொடர்பாக வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயராஜை கைது செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு கோர்ட்டில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மினி லாரி டிரைவர் விஜயராஜ் மீதான கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.