திருவாரூரில், விற்பனைக்காக குவிந்துள்ள நெட்டி மாலைகள்


திருவாரூரில், விற்பனைக்காக குவிந்துள்ள நெட்டி மாலைகள்
x

திருவாரூரில், விற்பனைக்காக குவிந்துள்ள நெட்டி மாலைகள்

திருவாரூர்

மாட்டு பொங்கலன்று மாடுகளை அலங்கரிக்க பயன்படும் நெட்டி மாலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. விலை குறைந்து காணப்பட்டாலும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

மாட்டு பொங்கல்

மாட்டு பொங்கல் என்றதும் நமது நினைவில் வருவது உழவுக்கு உறுதுணையான கால்நடைகள் தான். உழவன் வீட்டில் மாட்டு பொங்கல் என்றால் தனி உற்சாகம் தான். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி நெட்டி உள்பட மலர் மாலைகளால் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். ஆனால் காலப்போக்கில் உழவுக்கு மாடுகளை பயன்படுத்திய காலம் மாறி அனைத்து பணிகளும் எந்திரமயமானது.

இதனால் பல வீடுகளில் மாட்டு கொட்டகைகள் காணாமல் போய் டிராக்டர் கூடாரமாக மாறி போனது. இன்னும் கால்நடைகளை மறவாமல் இருப்பதற்கு காரணமாக பால் என்ற ஒன்றுக்காக தான் என்ற நிலை இருந்து வருகிறது. இருந்த போதிலும் சில பகுதிகளில் மாடுகளின் உதவியுடன் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

நெட்டி மாலைகள்

மாட்டு பொங்கலின் முக்கிய இடத்தை பிடிப்பது நெட்டி மாலைகள் தான். கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் மாலைகள் விற்பனைக்கு வந்தாலும், மாடுகளின் உடலுக்கு தீங்கு ஏற்படாத நெட்டி மாலைகளை வருடந்தோறும் கிராம வாசிகள், பொதுமக்கள் தங்களது மாடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். 16-ந்தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்பட உள்ளதால் திருவாரூரில் நெட்டி மாலைகளை விற்பனைக்காக குவிந்து வைக்கப்பட்டுள்ளன.

நெட்டி மாலைகளை பொருத்தவரை வில்லை என்று கூறப்படும் காசி மாலை ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கண்ட மாலை ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூமாலையை பொருத்தவரை ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்சி சார்ந்த மாலைகள், டிஸ்கோ மாலைகள், மம்மி டைப் மாலைகள், மல்டி டைப் மாலைகள் மொத்த விலையில் ரூ.100 முதல் ரூ.125 வரையும், சில்லறை விலையில் ரூ.10 முதல் ரூ.15 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் நெத்தி மணி, கொம்பு மணி, கழுத்து மணிகள் ரூ.25 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்வம் இல்லை

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மாட்டுபொங்கல் என்றாலே நெட்டி மாலைகள் தான் அதிகளவில் விற்பனையாகும். நெட்டி மாலையை தயாரிப்பவர்கள் இதற்கான பணிகளை நவம்பர் மாதமே தொடங்கி விடுவார்கள். பல்வேறு வேலைபாடுகளுடன் தொடங்கிய பணியை 2 மாதத்தில் முடித்து விடுவார்கள். விற்பனைக்கு நெட்டி மாலைகள் தயாரானதும் நாங்கள் (வியாபாரிகள்) வாங்கி வந்து விற்பனைக்கு கொண்டு வருவோம்.

கடந்த ஆண்டை காட்டிலும் நெட்டி மாலைகளின் விலை இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. விலை குறைந்தாலும் பொதுமக்களிடம் வாங்கும் ஆர்வம் இல்லை. மாட்டு பொங்கலுக்கு நாட்கள் நெருங்குவதால் இனிவரும் காலங்களில் விற்பனை இருந்தால் நன்றாக இருக்கும் என்றனர்.


Next Story