குப்பைகளை சேகரிக்க புதிய பேட்டரி வாகனங்கள்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் குப்பைகளை சேகரிக்க புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் குப்பைகளை சேகரிக்க புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
பேட்டரி வாகனங்கள்
பொள்ளாச்சியில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் குப்பைகளை வாங்குவதற்கு பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட வாகனங்களில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் தற்போது புதிதாக பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இதில் ஆட்டோக்கள் வடிவில் டிரைவர் இருக்கை பகுதியில் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு தேவையான பேட்டரி வாகனங்கள் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் விரைவில் ஊராட்சிகளுக்கு குப்பைகளை சேகரிக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தூய்மை பாரத திட்டம்
இதுகுறித்து வடக்கு ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு தற்போது குப்பைகளை சேகரிக்கும் பணிக்கு புதிதாக 37 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. ஒரு வாகனம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வாங்கப்பட்டு உள்ளது. தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மத்திய அரசின் 70 சதவீதம், மாநில அரசின் 30 சதவீதம் நிதியை கொண்டு பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
சிறிய ஊராட்சிகளுக்கு ஒரு வாகனம், பெரிய ஊராட்சிகளுக்கு 2 வாகனங்கள் என்ற அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக 8 பேட்டரி வாகனங்கள் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் இருந்த பேட்டரி வாகனங்களை விட தற்போது வாங்கப்பட்டு உள்ள பேட்டரி வாகனங்களில் வேகமாக செல்ல முடியும். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் பெறப்பட்ட பிறகு, அந்தந்த ஊராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






