பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்


பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
x

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை மொத்தமாக உருவாக்கி பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தின் தமிழ்நிலம் வலைதளத்தில் (https://tamilnilam.tn.gov.in) நிறுவப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கான பட்டா மாறுதலுக்கான புதிய மென்பொருள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைப்பிரிவில் (லே அவுட்) பொதுமக்கள் மனைகள் கிரையம் பெறும்போது ஒவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியாக மனுக்கள் பெறப்படும் சூழல் இருந்து வருகிறது. ஒரே மனைப்பிரிவில் உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக நில அளவர் பல்வேறு தினங்களில் தனித்தனியே செல்லவேண்டிய சூழலும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகிறது. அதில் பெரும்பாலான மனுக்கள் மனைப்பிரிவைச் சார்ந்தவை. இதனால், உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

சில நிமிடங்களில்...

தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ள இப்புதிய மென்பொருள் மூலமாக மனைப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, மனைப்பிரிவின் உரிமையாளர்களின் பெயரில் பதிவு செய்யப்படும். எனவே பின்பு மனைகளை உட்பிரிவு செய்யக்கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்பட்டு, விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும். இப்புதிய மென்பொருள் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டு, மனைப்பிரிவின் உரிமையாளர் பெயரிலேயே பட்டா வழங்கப்படும்.

தனித்தனியே பொதுமக்கள் அந்த மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கும்போது, பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரையம் பெற்ற பொதுமக்களின் பெயரில் மாற்றம் செய்யப்படும். பட்டா மாற்றத்திற்காக பொதுமக்கள் மீண்டும் தனியே விண்ணப்பிக்கவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

மனைப்பிரிவில் உள்ள பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களான சாலைகள், பூங்கா போன்ற நிலங்கள் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு, அந்த இடம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் உடனுக்குடன் நில ஆவணங்களில் பதிவு செய்யப்படும். இதனால் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுக்க இயலும். மேலும், இதுபோன்ற பொதுப்பயன்பாட்டிற்கான நிலங்களை மோசடியாக விற்பனை செய்யும் நிகழ்வுகளும் தவிர்க்கப்படும்.

புதிய மென்பொருள்

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள், வருவாய் கிராமங்கள் நகர மயமாதலுக்கு பின்னர் நகர்ப்புற தன்மையை அடைவதைத் தொடர்ந்து நகரளவைப் பணி மேற்கொள்ளப்படும். நகரளவைப் பணியின்போது வருவாய் ஆவணங்கள் நகர நில அளவை பதிவேடுகளாக மாற்றம் செய்யப்பட்டு, புல எண்கள் வார்டு மற்றும் பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, புதிய நகர நிலஅளவை எண்கள் உருவாக்கப்படுகின்றன.

அந்த புலங்களின் உடைமைதாரர்களின் உரிமை ஆவணங்கள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் புலங்களின் உரிமை குறித்த நில ஆவணங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இப்பணி 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு மாநிலத்திலுள்ள பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளில் 15 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மிகுந்த காலதாமதமாவதால் மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்களை பெறுவதில் சிரமம் இருந்தது. தற்போது நகரநிலவரித்திட்ட பணிகளை குறைந்த காலத்திற்குள் முடிக்க ஏதுவாக தேசிய தகவலியல் மையம் வாயிலாக தயாரிக்கப்பட்ட புதிய மென்பொருளை முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.

துல்லியமாக.....

இப்புதிய மென்பொருளின் பயனாக, கைமுறை செயலாக்கம் மூலம் விசாரணை அறிவிப்பு, இறுதி அசல் ஆவணங்கள் தயாரிப்பு, சிட்டா நகல் தயாரித்தல் போன்ற பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

இந்த மென்பொருள் மூலம் தயார் செய்யப்படும் இறுதி ஆவணங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் கொண்டதாக அமைவதுடன், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகத்திலிருந்தே இப்பணிகளை நேரடியாக கண்காணிக்க வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது வருவாய் பின்தொடர் பணி நடைபெற்று கொண்டிருக்கும் 9 மாநகராட்சிகள் மற்றும் 36 நகராட்சிகளின் நகர நிலவரித்திட்ட அலகுகளில் மேற்படி மென்பொருள் நிறுவப்படும். இதன் மூலம் நகரப்பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்கள், இணைய தளம் மூலமாக விரைவில் கிடைக்க பெரிய அளவில் ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story