புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கற்பிக்கும் நோக்கத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மயிலாடுதுறை ஒன்றியத்தில் 50 மையங்கள் தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 903 கற்போர்கள் கல்வி கற்று வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு நூல் மற்றும் எழுதுபொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை கூறைநாடு நகராட்சி கிட்டப்பா மேல்நிலை பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு செழியன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் விழிப்புணர்வு முழக்கங்களை மாணவர்கள் எழுப்பி சென்றனர். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கயல்விழி மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொண்டனர்.