வளையப்பட்டியில் புதிய பாலம் கட்டப்படுமா?


வளையப்பட்டியில் புதிய பாலம் கட்டப்படுமா?
x

மழையால் தண்ணீரில் மூழ்கும் வளையப்பட்டியில் புதிய பாலம் கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாமக்கல்

மோகனூர்

தாழ்வான பாலம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வளையப்பட்டி. இங்குள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் செல்லும் ஒரு சாலையில் கரை போட்டான் ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலம் மிக தாழ்வாக உள்ளதோடு, சாலையும் மிகவும் சேதமடைந்து உள்ளது. அதனால் அந்த வழியாக தினமும் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்கு புதிய பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் கடந்த சில ஆண்டுகள் முன்பே கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் அந்தப் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

ஒரு கி.மீ. சுற்றி செல்லும் நிலை

ஆனால் அதன் பிறகு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக கொல்லிமலையில் அதிக மழை பெய்யும்போது தூசூர் ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் இந்த பாலம் வழியாக அரூர், ஆண்டாபுரம் சென்று அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பி காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. அந்த ஆற்றில் அதிக தண்ணீர் வரும்போது வளையப்பட்டி பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள பாலத்தின் மேல் தண்ணீர் செல்லும். அதனால் சுமார் ஒரு கி.மீ. தூரம் பொதுமக்கள் சுற்றி வேறு வழியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து புதிதாக பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுப்பிக்க வேண்டும்

இதுகுறித்து வளையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி சண்முகம் கூறியதாவது:-

கரை போட்டான் ஆற்றில் கொல்லிமலை பகுதியில் அதிக அளவு மழை பெய்தால் தூசூர் ஏரி நிறைந்து வெளியேறும், உபரிநீர் இந்த பகுதி வழியாக பெருக்கெடுத்து ஓடும். அப்போது திப்ரமகாதேவி மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் சைக்கிளில் மற்றும் நடந்து, வரும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை உள்ளது. ஆகவே உடனடியாக பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பாலத்தை புதுப்பித்து, தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் பாதிப்பு

வளையப்பட்டியை சேர்ந்த விவசாயிராஜகோபால்:-

வளையப்பட்டி பகுதியில் இருந்து கரை போட்டான் ஆற்றை கடந்து தான் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளை வயல் பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டும். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் கால்நடைகளை ஓட்டி செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட தூரம் சுற்றிச்சென்று விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. அது மட்டுமின்றி தண்ணீர் வரத்து குறைந்தாலும் சாலை முழுவதும் சேறும், சகதியுமாகி நடக்கக்கூட முடியாத அளவிற்கு மோசமாகிவிடும். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி இந்த பகுதியில் உயர்மட்ட தரைவழிப்பாலம் அமைத்து தார் சாலை அமைக்க வேண்டும்.

பயன்படுத்த முடியாத நிலை

வளையப்பட்டி ஊராட்சி மன்றஉறுப்பினர் பிரபாகரன்:-

தூசூர் ஏரி நிறைந்தபிறகு வரும் உபரிநீர் பல்வேறு வழியாக வளையப்பட்டி வந்தடைந்து அரூர் ஏரி, ஆண்டாபுரம் ஏரிக்கு செல்லும். அந்த ஏரிகள் நிரம்பி திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகில் உள்ள நாகைநல்லூர் பகுதி வழியாக சென்று காவிரியாற்றில் கலக்கின்றது. இவ்வளவு பழமை வாய்ந்த இந்த கரை போட்டான் ஆறு, வளையப்பட்டி பஸ் நிறுத்தம் பின்புறம் குறைந்த தூரம்தான் உள்ளது. எனவே பாலம் அமைத்து சாலை சீரமைக்கப்பட்டால், வளையப்பட்டியில் இருந்து திப்ரமகாதேவி, வழியாக எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு பயன்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story