வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.171 கோடியில் புதிய கட்டிடங்கள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.171 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.171 கோடியே 36 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பில் ரூ.10 கோடியே 88 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் சார்பில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், நகர் ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் எ.சரவணவேல்ராஜ், நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குனர் பா.கணேசன், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பதிவாளர் அ.த.பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒதுக்கீடு ஆணைகள்
அதனைத்தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.19.98 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலைப் பூங்கா, இரும்பு வணிக அங்காடியில் அமைக்கப்படவுள்ள கான்கிரீட் சாலைப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 330 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள், 5,430 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் 518 பயனாளிகளுக்கு அடுக்குமாடி மற்றும் மனைகளுக்கான உரிமை ஆவணங்களை அவர் வழங்கினார்.
தீயணைப்பு நிலையங்கள்
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் சென்னை மாவட்டம் கொளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கம் உள்பட 12 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் உள்பட 4 தீயணைப்பு நிலையங்களை தரம் உயர்த்தி, மொத்தம் ரூ.20 கோடியே 13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.
ரோந்து வாகனங்கள்
சென்னை பெருநகர காவல் துறையினரின் பயன்பாட்டுக்காக ரூ.2 கோடி மதிப்பீட்டிலான 10 மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் ரூ.67 லட்சம் மதிப்பீட்டிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாலை பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக சென்னை பெருநகர காவல் துறைக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 5 புதிய நான்கு சக்கர மீட்பு இழுவை வாகனங்களும், 5 புதிய இருசக்கர மீட்பு இழுவை வாகனங்களும் என மொத்தம் 10 மீட்பு இழுவை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரோந்து பணி
சென்னை பெருநகர காவல் துறையினரின் கடற்கரை ரோந்து மற்றும் சுற்றுக்காவல் பணிக்காக கடற்கரை ரோந்து வாகனங்கள் வாயிலாக மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் பாதுகாப்பு ரோந்து மற்றும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இந்த வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
கடற்கரை ரோந்துப் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய கடற்கரை ரோந்து வாகனங்கள் சென்னை பெருநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 வாகனங்கள் சுற்றுக் காவல் பணிக்கும், ஒரு வாகனம் சுற்றுக் காவல் மற்றும் கடல் அலைகளில் சிக்கிக் கொண்டவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு துரிதமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லக்கூடிய பணிக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மணலில் வேகமாக செல்லும்
இந்த வாகனங்கள் மணல் பரப்பில் வேகமாக செல்லும் வகையில் 4 சக்கர இயக்கியால் இயங்கக்கூடியது. ஒலிபெருக்கி வசதியுடன் இவ்வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குற்றவாளிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்தால் எப்.ஆர்.எஸ். செயலி மூலம் அவர்களை கண்டறிந்து குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பண்டிகை தினங்களில் கடற்கரையில் அதிகப்படியான கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் விழிப்புடன் சுற்றுக்காவல் பணி மேற்கொள்ளவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. செ.சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் அபாஷ் குமார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.