திண்டிவனத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டினார்


திண்டிவனத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனத்தில் சென்னை சாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணியை தொடங்கும் விதமாக, நேற்று பூமி பூஜை நடந்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி, கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

6 ஏக்கரில் பஸ்நிலையம்

பின்னர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு திண்டிவனம் நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் விதமாக புதிய பஸ்நிலையம் அமைக்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருடன் பல்வேறு கட்டங்களாக இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

வசதிகள்

இங்கு, பஸ் நிலைய வளாகத்தில், ஒரே நேரத்தில் 50 பஸ் நிறுத்தங்கள், 61 கடைகள், 4 ஏ.டி.எம். மையங்கள், 1 சைவ உணவகம், 1 அசைவ உணவகம், பொருட்கள் வைக்கும் அறை, 10 காத்திருப்பு கூடம், 6 நேரக்காப்பகம், காவல்துறை கட்டுப்பாட்டு அறை, நான் உங்களுக்கு உதவலாமா அறை, பேருந்து முன்பதிவறை, ரயில் முன்பதிவறை, டிரைவர், கண்டக்டர் ஓய்வறை, 2 பகுதி மாற்றுத்திறனாளிகள் ஓய்வறை, 3 பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை, 1 சுகாதார பிரிவு அலுவலகம், 2 இலவச சிறுநீர் கழிப்பிடம், நிர்வாக அறை, பதிவறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதி, 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்காக 1 ஏக்கர் காலியிடம் விடப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகம் கட்டுப்பாட்டறை போன்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கும் ஒரு இடத்தை ஒதுக்குமாறு கேட்டுள்ளனர். நியாயமான கோரிக்கை தான் அதை பரிசீலனை செய்யப்படும்.

40 ஆண்டுகால எதிர்பார்ப்பு

கடந்த கருணாநிதி ஆட்சியில் 1996-ம் ஆண்டு அப்போதைய திண்டிவனம் எம்.எல்.ஏ. சேது நாதன் கோரிக்கையின் படி புதிய பஸ் நிலையத்துக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவருடைய வற்புறுத்தலின் பேரில் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன். அதன் பேரில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்து, பஸ்நிலையம் அமைய வழிவகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டிவன நகர மக்களின் 40 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இடைத்தேர்தலில் வெற்றி

தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் குறித்து கேட்ட போது, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப்பெறும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

விழாவில் திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், திண்டிவனம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், தி.மு.க. மாவட்ட தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், கவுன்சிலர்கள் பார்த்திபன், ராம்குமார், ஒலக்கூர் ஒன்றிய குழு தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் ராஜாராம், வல்லம் ஊராட்சி குழு தலைவர் அமுதா, மரக்காணம் ஊராட்சி குழு துணை தலைவர் பழனி, ஈச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சேகர், அரசு ஒப்பந்ததாரர் நந்தகுமார் மற்றும் திண்டிவனம் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், நகர பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story