புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு

நெல்லையில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
நெல்லையில் புதிதாக கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோ-ஆப்டெக்ஸ் நடப்பு ஆண்டில் விற்பனையை பெருக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழரின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நவீனம் கலந்த புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சீபுரம் பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், திருபுவனம் பட்டுசேலைகள், சேலம் மற்றும் கோவை பட்டு சேலைகள், சின்னாளப்பட்டி பட்டுப்பருத்தி சேலைகள், நெகமம் பருத்தி சேலைகள், திண்டுக்கல் மற்றும் பரமக்குடி பருத்தி சேலைகள், லினன் சேலைகள், ஆடவருக்கான கைலிகள், பவானி ஜமக்காளம், குழந்தைகளுக்கான பட்டுபாவாடைகள், சட்டைகள் என ஏராாளமான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரூ.4½ கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கோ-ஆப்ெடக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






