புதிய மதகு பொருத்த திட்டம்
பரம்பிக்குளம் அணையில், 2-ந் தேதி புதிய மதகு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உபகரணங்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையில், 2-ந் தேதி புதிய மதகு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உபகரணங்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மதகு உடைந்தது
பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் அணை முழுகொள்ளளவை எட்டியது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் சோலையாரில் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரும்பு சங்கிலி அறுந்து பீம் (சுவர்) இடிந்து விழுந்ததில் மதகு சேதமடைந்தது. இதை தொடர்ந்து நீரின் அழுத்தம் காரணமாக மதகு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து மதகு வழியாக உபரிநீர் வெளியேறியது. மதகு சேதமடைந்ததால் சுமார் 5 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.
2-ந் தேதி பொருத்த திட்டம்
இதற்கிடையில் திருச்சியில் உள்ள பணிமனையில் இருந்து உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் அணையில் புதிய மதகை பொருத்துவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 17.8 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாம். அணையில் இருந்த மதகின் அளவு 42-க்கு 27 அடியும், 30 டன் எடையும் கொண்டதாகும். ஒரு மதகு வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 20,750 கன அடி நீர் வெளியேற்ற முடியும். மதகு சேதமடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பிறகு, புதிதாக மதகு அமைப்பதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் திருச்சியில் இருந்து மதகிற்கு தேவையான உபகரணங்கள் பரம்பிக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு வெல்டிங் வைத்து உபகரணங்களை இணைத்து 35 டன் எடையில், பழைய மதகை போன்று தயாரிக்கப்படும். இந்த பணிகளை வருகிற 2-ந்தேதிக்குள் முடித்து அணையில் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விவசாயிகள் வலியுறுத்தல்
இதுகுறித்து பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கூறுகையில், பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்ததால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே புதிதாக மதகு பொருத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அப்போது தான் மழைநீரை அணையில் தேக்கி வைக்க முடியும் என்றனர்.