ஆன்லைன் மூலம் படிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் புதிய பட்டப்படிப்பு


ஆன்லைன் மூலம் படிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் புதிய பட்டப்படிப்பு
x

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் மூலம் படிக்கும் வகையிலான பி.எஸ். மின்னணு அமைப்பியல் எனப்படும் புதிய பட்டப்படிப்பை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்துவைத்தார்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். மின்னணு அமைப்பியல் எனப்படும் புதிய பட்டப்படிப்பு தொடக்கவிழா நேற்று நடந்தது. ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கதுரை வரவேற்றார்.

விழாவில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு புதிய பட்டப்படிப்பை அறிமுகம் செய்தார்.

அவர் பேசும்போது, 'புதிய கல்வி கொள்கையின்படி டிஜிட்டல் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தேசிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்தும் கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய கல்வி கொள்கை நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஆன்லைன் படிப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

பாராட்டுக்குரியது

வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. தேவையை அறிந்து சரியான நேரத்தில் பி.எஸ். மின்னணு அமைப்பியல் என்ற புதிய படிப்பை சென்னை ஐ.ஐ.டி. தொடங்கி இருப்பது பாராட்டுக்குரியது' என்றார்.

சென்னை ஐ.ஐ.டி. ஆட்சிமன்ற குழு தலைவர் பவன் கோயங்கா, மின்னணு பொறியியல் துறை தலைவர் நாகேந்திர கிருஷ்ணபுரா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பேராசிரியர்கள் பாபி ஜார்ஜ், அனிருத்தன் ஆகியோர் புதிய படிப்பு குறித்து விளக்கி கூறினர்.

3 நிலைகளில் படிப்பு

இந்த புதிய பட்டப்படிப்பு குறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி கூறியதாவது:-

பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவை தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்பில் சேரலாம். ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், ஏற்கனவே வேறொரு படிப்பை கல்லூரி மூலம் படிப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். வயது வரம்பு கிடையாது.

அடிப்படை நிலை, டிப்ளமோ, டிகிரி என 3 நிலைகளாக இந்த படிப்பு நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு நிறைவு செய்பவர்களுக்கு அடிப்படை நிலை என்ற சான்றிதழும், 2-ம் ஆண்டு நிறைவு செய்பவர்களுக்கு டிப்ளமோவும், 3, 4-ம் ஆண்டுகளை நிறைவு செய்பவர்களுக்கு பட்டமும் வழங்கப்படும்.

இந்த படிப்பில் சேருபவர்கள் தேவைப்பட்டால் அடிப்படை நிலை, டிப்ளமோ ஆகிய நிலைகளில் படிப்பை நிறைவு செய்துகொள்ளலாம்.

கல்வி உதவித்தொகை

இந்த படிப்புக்கு எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. இதில் சேருவதற்கு திறமையான கிராமப்புற பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். இந்த படிப்பில் சேரும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story