பா.ஜ.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் காய்கறியை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சேலம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தளவாய்பட்டியில் ஆவின் பால்பண்ணை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் எம்.எல்.பி.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் பூபதி ராஜா, ஒன்றிய பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் தங்கவேல், முத்துநாயக்கன்பட்டி ஜெயபால் உள்பட ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக கட்டி அதனை கழுத்தில் அணிந்து கொண்டு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மகளிர் அணி
இதேபோல், சேலம் காந்திரோடு பகுதியில் அஸ்தம்பட்டி மண்டலம் பா.ஜ.க. சார்பில் நேற்று விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவகாமி பரமசிவம் கலந்து கொண்டு பேசினார். அஸ்தம்பட்டி மண்டல தலைவர் கரிகாலன், மண்டல பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பா.ஜ.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இரும்பாலை
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் இரும்பாலை அருகில் சர்க்கார் கொல்லப்பட்டி பஸ் நிறுத்தத்தில் தெற்கு ஒன்றிய தலைவர் பாலமுருகன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் பழனிகுமார், சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஒன்றிய பொருளாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
ஆர்ப்பாட்டத்தில் உணவு பொருட்களின் உயர்வு, தக்காளி, வெங்காயம், பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சூரமங்கலம்
சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்,
இதில் மண்டல தலைவர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.






