அம்ருத் திட்டத்தில் ரூ.25¼ கோடியில் புதிய குடிநீர் பணிகள்


அம்ருத் திட்டத்தில் ரூ.25¼ கோடியில் புதிய குடிநீர் பணிகள்
x

ஓடுகத்தூர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தில் ரூ.25¼ கோடியில் புதிய பைப்புகள் பதிக்கப்பட இருப்பதாக பேரூராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வேலூர்

பேரூராட்சி கூட்டம்

ஒடுகத்தூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று மாலை நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒரு கவுன்சிலர் தவிர 14 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அவர்கள் பேசியதாவது:-

3-வது வார்டு கவுன்சிலர் பேசுகையில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குகிறீர்கள். அதுவும் கால் மணி நேரமே வருகின்றது. கூடுதலாக நேரம் ஒதுக்கி குடிநீரை தாராளமாக வழங்க வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பேரூராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றார்.

நீர்மூழ்கி மோட்டார்

அதற்கு பதில் அளித்த செயல் அலுவலர் மழைக்காலங்களில் கொசு மருந்து தெளித்தால் கொசுக்கள் ஒழியாது. மழையில்லாத நேரத்தில் கொசு மருந்து அடிக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆத்து மேட்டுப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நீர்மூழ்கி மோட்டார் அமைக்க வேண்டும் என 7 முறை மனு அளித்துள்ளேன். இதுவரை நீர்மூழ்கி மோட்டார் அமைக்கவில்லை. ஆகவே எம்.எல்.ஏ.விடம் சொல்லிவிட்டு நான் சாலை மறியல் செய்வேன் என மற்றொரு கவுன்சிலர் கூறினார். குப்பைகள் எடுத்து செல்ல பேட்டரி வாகனங்களை வாங்க வேண்டுமென அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.

ரூ.25 கோடியில்

மேலும் 1991-ம் ஆண்டு அகரம்சேரி பாலாற்றில் இருந்து ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உலகவங்கி நிதி உதவியுடன் சுமார் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அந்தப் பைப்புகள் தற்போது பழுதாகி விட்டதால், புதிதாக குடிநீர் பைப்புகள் அமைப்பதற்கு ரூ.25 கோடியே 30 லட்சம் அம்ருத் திட்டத்தில் நிதி ஒதுக்கி இருப்பதாகவும், அந்த பணிகள் விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூட்டத்தில் செயல் அலுவலர் தெரிவித்தார்.


Next Story