கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க புதிய முயற்சி; கடலுக்குள் சாலை அமைக்கும் பணி தொடங்கியது


கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க புதிய முயற்சி; கடலுக்குள் சாலை அமைக்கும் பணி தொடங்கியது
x

கூடங்குளத்தில் நீராவி ஜெனரேட்டர்களுடன் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க புதிய முயற்சியாக கடலுக்குள் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளத்தில் நீராவி ஜெனரேட்டர்களுடன் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க புதிய முயற்சியாக கடலுக்குள் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

தரைதட்டிய மிதவை கப்பல்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கொண்டு வரப்பட்டது. அவற்றில் 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பலில் கூடங்குளத்துக்கு கொண்டு சென்றனர்.

மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களையும் மிதவை கப்பலில் ஏற்றி, கடந்த 8-ந்தேதி கூடங்குளத்துக்கு புறப்பட்டனர். 2 நீராவி ஜெனரேட்டர்களுடன் மிதவை கப்பலை இழுவை கப்பல் இழுத்து வந்தது. அப்போது இழுவை கப்பலுக்கும், மிதவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.

சாலை அமைக்கும் பணி

கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலையில் தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்பதற்கு சென்னையில் இருந்து வல்லுனர் குழுவினர் வரவழைக்கப்பட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் மிதவை கப்பலை மீட்க முடியவில்லை. மேலும் மிதவை கப்பல் பாறையில் மோதி சேதமடைந்ததால், நீராவி ஜெனரேட்டர்களுடன் மூழ்கும் நிலை உள்ளது.

இதையடுத்து கடற்கரையில் இருந்து, தரைதட்டிய மிதவை கப்பல் வரையிலும் தூண்டில் வளைவு போன்று சாலை அமைத்து, நீராவி ஜெனரேட்டர்களை கிரேன் மூலம் தூக்கி வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடற்கரையில் பாறாங்கற்கள் மற்றும் மணலை கொட்டி சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.


Related Tags :
Next Story