5.5 ஏக்கரில் புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டப்படும்
வேலூர் மாவட்டத்தில் 5.5 ஏக்கரில் புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டப்பட உள்ளதாகவும் அதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடப்பதாகவும் கதிர்ஆனந்த் எம்.பி. தெரிவித்தார்.
மருத்துவமனையில் ஆய்வு
வேலூரில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது என்று நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அங்குள்ள மருந்தகம், மருந்தக கிடங்கு, சமையலறை, அவசர சிகிச்சை பிரிவு, சித்தா மற்றும் ஆயுர்வேதா பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெயசீதா, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் குருபிரகாஷ், டாக்டர்கள் பிரியா, செந்தாமரைக்கண்ணன், மருந்தாளுனர் வேந்தன் உள்ளிட்ட டாக்டர்கள் உடன் இருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சில அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆலோசனை கூட்டம்
பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூரில் முக்கிய மருத்துவமனையாக இந்த மருத்துவமனை திகழ்கிறது. தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக இயங்குகிறது. தற்போது மத்திய, மாநில அரசுகள் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதாவது இந்த மருத்துவமனைக்கு தேவைப்படக்கூடிய கருவிகள், எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி கொடுப்பதற்காக கமிட்டி ஒன்று அமைத்துள்ளனர். இந்த கமிட்டியின் தலைவராக நான், உறுப்பினர்களாக மருத்துவமனை டாக்டர்கள் மூலம் இந்த கமிட்டி செயல்படுகிறது. மருத்துவமனை தொடர்பாக இனி மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கையும் இந்த கமிட்டியின் ஒப்புதல் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் இங்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
புதிய மருத்துவமனை
இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, ஏராளமான நடுத்தர மற்றும் தொழிலாளர் மக்களுக்கு உதவிகரமாக இந்த மருத்துவமனை திகழ்வது தெரியவந்தது. இந்த மருத்துவமனைக்கு பல தேவைகள் உள்ளது. அதில் முக்கியமாக இட பற்றாக்குறை உள்ளது. இதற்கு விடிவு காலம் பிறக்கும் வகையில் சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. அதற்கான இடம் கேட்டுள்ளனர். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. மாவட்ட கலெக்டரும் அதற்கான நிலம் தருவதாக தெரிவித்துள்ளார்.
இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மருத்துவமனை கட்டப்படும். இதற்கான செலவு தொகை மத்திய அரசு தருவதாக தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம் முடிவுற்ற பின்னர் அவர் கூறுகையில், மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சிறு தேவைகள் நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உள்ளது. புதிய மருத்துவமனை சுமார் 100 படுக்கைகள் கொண்டதாக அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என்றார்.