பரமக்குடியில், புதிய உரக்கட்டுப்பாடு ஆய்வக அலுவலகம்
பரமக்குடியில், புதிய உரக்கட்டுப்பாடு ஆய்வக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் புதிய உரக்கட்டுப்பாடு ஆய்வக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அதை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது. கருணாநிதி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இதில் வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் துரைமுருகன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர்மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், உதவி வேளாண்மை இயக்குனர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு வினியோகிக்கப்படும் உரங்களின் தரம், அதன் தன்மை, தயாரிப்பு தேதி உள்ளிட்டவை குறித்து இந்த அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டது.