புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் வரதட்சணை கொடுமையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே சிறுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் கனகவல்லி (வயது 20). இவருக்கும் பாச்சாபாளையம் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் சுகுணேஷ் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனகவல்லியை அவரது பெற்றோர் சிறுபாக்கத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் வேலை தொடர்பாக கனகவல்லியின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியே சென்றனர்.
இதனால் கனகவல்லி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கனகவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வரதட்சணை கொடுமை காரணமாக கனகவல்லி தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணம் ஆகி 3 மாதங்களில் கனகவல்லி தற்கொலை செய்து கொண்டதால், அவரது சாவு தொடர்பாக திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி மேல்விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.