புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காவேரிப்பாக்கம் அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

ராணிப்பேட்டை

தாய்வீட்டுக்கு...

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா (வயது 22). இவருக்கும் காவேரிப்பாக்கம் அருகே உள்ள குப்பத்துமோட்டூர் பகுதியை சேர்ந்த தினகரன் (28) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தினகரன் வாணிச்சத்திரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் விழாவை முன்னிட்டு திவ்யாவை, அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு கடந்த 14-ந்தேதி அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் 16-ந்தேதி அவரை தினகரன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தாய் வீட்டிற்கு வந்த இரண்டு நாளிலேயே மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்ததால் திவ்யா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் திவ்யாவின் மாமியார், தாய் வீட்டுக்கு சென்றாயே நகை போட்டு வரவில்லையா என கேட்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில் விரக்தி அடைந்த திவ்யா வீட்டில் உள்ள மின்விசிறியில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 8 மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்டதால், அதற்கான காரணம் குறித்து ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story