புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்
திருமணமான 2½ மாதத்தில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
துடியலூர்
கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 29 வயது பெண், தன்னுடன் கல்லூரியில் படித்த ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர். இதன்படி மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். இதையடுத்து கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தாலும், அந்த பெண் தனது காதலனின் நினைவோடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று புதுப்பெண் கணவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் கணவர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது விசாரணை செய்ததில், புதுப்பெண் அவரது காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து புதுப்பெண்ணின் கணவர், துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2½ மாதத்தில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.