மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள்- வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்


மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள்- வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2023 7:00 PM GMT (Updated: 21 Feb 2023 7:00 PM GMT)

பருத்தி, நிலக்கடலை, தென்னை மற்றும் பயறுவகை பயிர்களில் மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் குறித்து வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம் அளித்துள்ளது.

திருவாரூர்

பருத்தி, நிலக்கடலை, தென்னை மற்றும் பயறுவகை பயிர்களில் மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் குறித்து வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய உழவியல் வல்லுனர் கருணாகரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயறு வகை பயிர்கள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 'பயறு அதிசயம்' என்ற கலவை பயறு வகைகளின் உற்பத்தியினை அதிகரிக்க உதவுகிறது. பயறு வகைகளுக்கு தேவையான இலை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் இரும்பு, போரான் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள், ஆக்ஸின் என்னும் பயிர் ஊக்கி ஆகியவற்றை இந்த மருந்து உள்ளடக்கி உள்ளது. பயறு வகை பயிர்களில் பூப்பூக்க தொடங்கும்போது பயறு அதிசயம் என்ற இந்த கலவையை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் அதிக உற்பத்தியினை பெற இயலும். இப்பயிர் ஊக்கியை, உளுந்து மற்றும் பாசி பயிர்களுக்கு டி.ஏ.பி. கரைசலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

பருத்தி-நிலக்கடலை

பருத்தியில் பூ மற்றும் சப்பைகள் உதிர்வதால் மகசூல் குறைபாடு ஏற்படுகிறது. காய் முழுமையாக வெடிக்காமல் பஞ்சு மகசூல் குறைகிறது.

இதை நிவர்த்தி செய்ய பருத்தி பிளஸ் என்ற நுண்சத்து வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தலாம்.

நிலைக்கடலை ரிச் என்ற கலவையை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் பூக்கும் மற்றும் 2 கிலோ என்ற அளவில் காய் பிடிக்கும் பருவத்தில் இலை வழியாக 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூ பிடிக்கும் திறன் அதிகரித்து மகசூல் 15 சதவீதம் வரை கூடும்.

தென்னை டானிக்

தென்னை மரங்களில் குரும்பை உதிர்வது குறைந்து காய்களின் எண்ணிக்கை அதிகரித்து, காய்களின் பருமனும் தரமும் அதிகரிக்க தென்னை டானிக்கை பயன்படுத்தலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை வேர் மூலம் டானிக்கை செலுத்தினால் மரங்கள் செழிப்பாக வளர்ந்து உயர் விளைச்சல் கொடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story