ரூ.854 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்படும்


ரூ.854 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்படும்
x

ராசிபுரத்துக்கு ரூ.854 கோடி மதிப்பீட்டில் புதிய ட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என சுதந்திர தின விழாவில் ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் நகராட்சியில் சுதந்திர தின விழா மற்றும் நகராட்சியின் பவள விழா நடைபெற்றது. நகராட்சித் தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். ஆணையாளர் சுபாஷினி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள், மழை அங்கி, தொப்பி, கையுறைஆகியவற்றையும் வழங்கினார்.

விழாவில் ராஜேஸ்குமார் எம்.பி. பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ராசிபுரம் நகராட்சி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.854 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

இதன் மூலம் ராசிபுரம் நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள 6.20 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும். ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. போதமலைக்கு ரூ.140 கோடி செலவில் விரைவில் சாலைப்பணிகள் தொடங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வகையில் மினி டைட்டில் பார்க் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், ராசிபுரம் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் ராஜேஷ் பாபு, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் அரங்கசாமி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story