ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம்; ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்
வள்ளியூர் அருகே ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடத்தை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்.
வள்ளியூர்:
பணகுடி அருகே உள்ள பழவூரில் நூலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனை புதுப்பிக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி கட்டிட வேலைகள் முடிவடைந்து திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பழவூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணைத்தலைவர் அரிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி கல்வெட்டையும் திறந்து வைத்தார். மேலும் நூலகத்திற்கு புதிதாக சேர்ந்த நன்கொடையாளர் 2 பேருக்கும், புரவலர்கள் 10 பேருக்கும் உறுப்பினர்களாக பள்ளி மாணவ-மாணவிகள் 522 பேருக்கும் அடையாள அட்டையை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழவூர் ஊர்நல கமிட்டி தலைவர் இசக்கியப்பன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் நம்பி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக் ஜூட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.