வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நெல்லை-தென்காசி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இது வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் நிகழக்கூடிய முதல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14 ஆம் தேதி வாக்கில் உருவாகக் கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கக் கூடும்.